Search This Blog
Wednesday, August 19, 2009
பொக்கிசம்
அன்புள்ள லெனின் அறிவது,
கண்களிரண்டும் கண்ணீர் சிந்த, இதயம் அழுது வடிக்க உங்கள் காதலி நதீரா எழுதிக் கொள்வது,
நீங்கள் செத்துப் போய் விட்டீர்களாம்..! நேற்றுத்தான் உங்கள் அன்புமகன் சொன்னான். என்றைக்கும் பொருள் கூறும் திருக்குறளின் ஈரடி போன்று நாம் ஈருடலும் ஓருயிருமாகிவிட்ட பின்னர் உங்களுக்கு ஏது சாவு? அலையெழுந்து தாலாட்டும் கடலின் கரை போல உங்கள் நினைவுகள் எப்போதும் என்னைத் தாலாட்டுகின்றன.
என்னைத் தேடி நீங்கள் பட்ட கஸ்டங்களையும், சந்தித்த இடர்களையும் உங்கள் கடிதங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். என் தந்தைக்கு கொடுத்த வாக்கின்படி மாதம் ஒருமுறை மட்டும் கடிதம் எழுதிய உங்கள் நேர்மையை என்னவென்று உரைப்பது? மதமா... மனிதமா எனும் போட்டியில் மனிதம் ஜெயித்த போது நாம் அடைந்த பரவசத்துக்கு ஈடேதும் உண்டோ? உங்கள் தந்தையும் என் தந்தையும் கட்டியணைத்த போது, இறக்கைகட்டி வானில் ஜோடிப் புறாக்களாக பறந்தோம். ஆனால், எல்லாம் போலியென்று உணர்ந்த போது - மனிதம் மரித்த போது இந்த உலகை விட்டுப் போய்விடத் துடித்தேன்.
ஆனாலும், என்றைக்கோ ஓர் நாள் உங்கள் அன்பு ஸ்பரிசம் கிடைக்குமென - அந்தக் கடற்கரையில் காத்துக்கிடக்கும் ஒற்றை ஓடமெனத் தவமிருந்தேன். நினைத்தது போல் எல்லாம் நடந்திடுமா...? கடிதங்களினூடு உறவாடி நாங்கள்வரைந்த காதல் காவியம் இப்படி ஆகுமென்று யார் கண்டது. குரங்கின் கை பூமாலையாக சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டது.
எல்லோரும் வலிந்து காட்ட விளைகின்ற எந்தவொரு ஹிரோயிசமுமின்றி - ஓர் மிருதுவாளனாக, கண்டதும் உங்கள் மேல் பரிவு கொள்கின்ற ஓர் கதாநாயகனாகத்தானே எனக்கு அறிமுகமானீர்கள். பிறகு எங்கிருந்து வந்தது உங்களுக்குள் வன்முறை?
நான் சொல்லாமல் மலேசியா வந்த பின்னர், நீங்கள் என்னைத் தேடி அலைந்த போது பதில் சொல்லாததற்காக என் வீட்டு வேலைக்காரனை அடித்தீர்களாமே...! எங்கள் காதல் காவியத்தில் எந்தவொரு மோதலும் இல்லை எனும் குறையைப் போக்க விளைந்திருக்கிறீர்கள் போல... ஆனால், கண்ணிரண்டும் கண்ணீர் சொரிய உங்கள் கடிதங்களை வாசித்த நான் சிரித்ததும் இந்த இடத்தில் தான்.
எப்படி அவனுக்கு அடித்திருப்பீர்கள்..? வானத்தில் பறந்து பறந்து... மின்னல் வேகத்தில் பாய்ந்து பதுங்கி... கைவிரல்களை நற நறவென முறுக்கி... அல்லாதுவிடின், அந்தக் கடற்கரை மணலில் உருண்டு புரண்டு உங்கள் மாறாத குழந்தைத்தனத்தை நிரூபித்தீர்களோ...? காதல் காவியத்தில் சண்டைக்காட்சியும் நகைச்சுவைக்காட்சியும் சேர்ந்து ஒன்றாகி வருவதை சகிக்க முடியவில்லை லெனின்...
இறுதி வரை அப்பா பிள்ளையாக இருந்து, அப்பாவின் ஆசைகளை நிறைவேற்றி ஒரு அன்பு மகனுக்கும் தந்தையாகி இருக்கின்றீர்கள். இந்தளவும் போதும் எனது மகிழ்ச்சிக்கு.
உங்களை முதன் முதலில் சந்தித்த வைத்தியசாலை... நீங்கள் பரிசளித்த இலக்கியப் புத்தகங்கள்... தெய்வமெனத் தொழுத தபால்காரன்... என் முக விம்பம் தெறித்த நீர்நிலைகள்... ஒற்றை ஓடம் தனித்திருந்த அந்தக் கடற்கரை... உங்களுடன் என் காதல் நினைவுகளையும் சுமந்து திரிந்த துவிச்சக்கர வண்டி... எல்லாவற்றையும் இன்று இரை மீட்டுப் பார்க்கின்றேன். ஈற்றில் சோகம்தானே எஞ்சுகின்றது.
என் வீடு தேடி வரும் போது உங்கள் வாகனத்தை காடையர்கள் இடை மறித்தார்கள் நினைவிருக்கிறதா? அதற்குள் இருந்த இளம் ஹீரோ வெகுண்டெழுந்து சண்டை பிடித்து எல்லாரையும் காப்பாற்றுவார் என சில்லறைத்தனமாய் நினைக்க... சாதுவாக வந்து சேர்ந்தீர்களே. உங்கள் புத்திசாலித்தனம் கண்டு வியக்கின்றேன் லெனின்.
ஏனோ தெரியவில்லை... உன் மகன் கொண்டு வந்து தந்த கடிதத்தை பிரித்து வாசிக்க முற்பட்ட போது யாரோ விட்ட கொட்டாவியும், உடைந்து சிதறிய போத்தல்களின் சத்தங்களும் தான் பிண்ணனியில் கேட்டன. ஆனாலும், பொக்கிசமாக நீங்கள் பொத்தி வைத்திருக்கும் என் நினைவுகளும், என்னிடம் விட்டுச் சென்று விட்ட உங்கள் நினைவுகளும் ஏழேழு ஜென்மம் கடந்தும் எங்கள் காதல்காவியத்தை வாழ வைத்துக்கொண்டு இருக்கும்.
அன்பு முத்தங்களுடன் அன்புக்காதலி,
நதீரா
பிற்குறிப்பு: இக்கடிதத்தை இறுதிவரை பொறுமையுடன் வாசித்து முடித்தவர்கள் பொக்கிசம் படம் பார்ப்பதற்கு தகுதியானவர்கள் என யாரும் சொன்னால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
இது யார் எழுதிய கடிதம். இது யார் எழுதிய கடிதம். கவிதைத் தனமாக எழுதப்பட்டிருக்கும் ஒரு நல்ல கடிதம். கடிதம் வாசிப்பு என்பது பழையதாகிவிட்டது.
ReplyDelete@வந்தியத்தேவன்
ReplyDeleteநீங்கள் இன்னும் பொக்கிசம் படம் பார்க்கவில்லையோ? பொறாமையாக இருக்குது
ஒரு டாலருக்கு இத வாங்கி பாக்கவா வேண்டாமா?
ReplyDeleteநான் இன்னும் பாக்கலை, தப்பித்துவிடுவேன் பார்ப்பதிலிருந்து என்றுதான் நம்புகிறேன்.
ReplyDeleteபொக்கிஷத்தை பார்த்த அனுபவத்தை சில எள்ளல்களுடன் அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள். படத்தை பார்த்து அதிகளவு பாதிக்கப்பட்டுவிட்டீர்கள் என்றும் நினைக்கிறேன். தங்களின் கடிதமுறை எழுத்து நன்றாகவே உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசத்தியமா எனக்கு இந்த கடிதத்தை வாசிக்க பொறுமை இல்லை,
ReplyDeleteஅப்ப நானும் பொக்கிசம் பாக்க முடியாதா.. ஏனெண்டால் நான் கடிதத்தையே ஓடி ஓடித்தான் படித்தேன்
ReplyDeleteபொக்கிஷத்தை நீங்க அனுபவித்து பார்த்ததைப்போலவே பதிவிலும் வடித்திருக்கிறீர்கள்
ReplyDeleteநன்று
தொடரட்டும்
இலக்கிய வடிவில் வந்த திரைக் காவியத்திற்கு அருமையான இலக்கிய வடிவிலான கடிதம். வித்தியாசமான முயற்சி.
ReplyDeleteநன்றாக இருக்கிறது.
பாராட்டுக்கள்
@குடுகுடுப்பை
ReplyDelete//ஒரு டாலருக்கு இத வாங்கி பாக்கவா வேண்டாமா?
நாளைக்கு ஏதாவது தொலைக்காட்சியில் வருவதற்கு முன்னர் பார்க்கவா வேண்டாமா?
@சின்ன அம்மிணி
ReplyDelete//நான் இன்னும் பாக்கலை, தப்பித்துவிடுவேன் பார்ப்பதிலிருந்து என்றுதான் நம்புகிறேன்.
இப்படத்துடன் சேரனின் ஹீரோயிசக்கனவு கலைந்தால் தப்பித்துவிடுவீர்கள் என்றுதான் நம்புகின்றேன்
@மருதமூரான்
ReplyDelete//பொக்கிஷத்தை பார்த்த அனுபவத்தை சில எள்ளல்களுடன் அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள். படத்தை பார்த்து அதிகளவு பாதிக்கப்பட்டுவிட்டீர்கள் என்றும் நினைக்கிறேன். தங்களின் கடிதமுறை எழுத்து நன்றாகவே உள்ளது. வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துரைக்கு நன்றி.
நான் விரும்பிப் போனதல்ல. தவிர்க்கமுடியாத நட்பொன்றின் அழைப்பின் நிமித்தம் சென்றேன்.
இனியாவது சேரன் தான் இறுகப் பற்றிப்பிடித்திருக்கும் அந்த வட்ட எல்லைகளைத் தாண்ட வேண்டும்.
@யோ வாய்ஸ்
ReplyDelete//சத்தியமா எனக்கு இந்த கடிதத்தை வாசிக்க பொறுமை இல்லை
ஒருமுறை பொக்கிசம் பார்த்து விட்டு வந்து வாசியுங்களேன்... :P
@Kiruthikan Kumarasamy
ReplyDelete//அப்ப நானும் பொக்கிசம் பாக்க முடியாதா.. ஏனெண்டால் நான் கடிதத்தையே ஓடி ஓடித்தான் படித்தேன்
கட்டாயம் பார்க்கலாம். தியேட்டரில் ஓடி ஓடிப் பார்க்க முடியாது தானே...:)
@கரவைக்குரல்
ReplyDelete//பொக்கிஷத்தை நீங்க அனுபவித்து பார்த்ததைப்போலவே பதிவிலும் வடித்திருக்கிறீர்கள்
நன்று
தொடரட்டும்
நன்றி கரவைக்குரல்
தாங்கலடா சாமி... இவிங்க எப்பதான் நடிக்கரத நிப்பாட்டப்போறாங்க தெரியலையே.. ஆத்தா...காப்பாத்து
ReplyDeleteThis film really touch my heart. Soft love story.
ReplyDeletei tnk i mgt lke the movie. any way thanks 4 ur post. u r post made me to watch the movie
ReplyDelete