இதுவரை தேவைப்படாமல் இருந்த சில சான்றிதழ்களினதும் பத்திரங்களினதும் தேவை இப்போது எழுந்துள்ளது. அதன் விளைவு கடந்த வியாழக்கிழமை முழுநாளும் பல்கலைக்கழகத்தில் கழிக்க வேண்டியதாயிற்று. பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பி பகல் தூக்கம் போடலாமென வேலைக்கு முழு நாள் லீவு எடுத்துப் போனேன். ஆனால், வீடு வந்து சேர மாலை நான்கு மணி.
பல்கலைக்கழகத்துக்கு நான் கடனாளி இல்லையென பத்துப்பேரிடம் கையொப்பம் வாங்கினால் தான் என் பத்திரங்கள் கிடைக்கும். இலகுவில் பிடிக்க முடியாத ஆள் எங்களின் விடுதிப் பொறுப்பாளர். ஆனால், என்னுடைய நல்ல காலம் ஒன்பதே முக்காலுக்கு முதலே முதல் ஆளாக அவரைப் பிடித்து விட்டேன். நான் மறந்து போன என் விடுதி அறை இலக்கத்துக்காக முறைத்துப் பார்த்த வண்ணம் கையொப்பமிட்டுத் தந்தார். என் விடுதி அறை இலக்கம் 231. இனியாவது நானும் என் மூன்று அறைத்தோழர்களும் மறக்காமல் இருப்போமாக...
எஞ்சிய எட்டுப் பேரிடமும் கையொப்பம் பெற கடினமிருக்கவில்லை. கடைசியாக எங்கள் டிபார்ட்மென்ட் ஹெட் இடம் வாங்க வேண்டும். சொல்லி வைத்தது போல நான் போகவும், அவர் மற்றைய கதவால் வெளியேறவும் நேரம் பத்தே முக்கால் இருக்கும்.
நான் வியாழக்கிழமையை தேர்ந்தெடுக்க விசேட காரணங்கள் எதுவுமிருக்கவில்லை. ஆனால்,நாலு வருடங்கள் கம்பஸில் இருந்தும் வியாழக்கிழமைதான் போர்ட் மீற்றீங் நடப்பதென்பதை நான் மறந்து போனதுதான் ஆச்சரியம். இனியென்ன... பதினொரு மணிக்கு முன்னர் அவர் வரவேண்டும். தவறினால் பன்னிரண்டரை மணிக்குப் பின்னர்தான் என் காரியம் ஆகும்.
பதினொரு மணிவரை அவர் வாசலில் தவம் கிடந்தேன். மற்றைய பழைய மாணவர்களைப் போல என்னைக் கடந்து செல்லும் சிட்டுக்களுக்கு நான் இன்னும் இளமை என்பதைக் காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனங்கள் எடுக்க வேண்டிய தேவையிருக்கவில்லை.
பதினொரு மணிக்கு என்னை நோக்கி வந்த அலுவலக உதவியாளரின் பார்வையில் ஏளனம் இருக்கவில்லை. என்னைப் பார்த்து பரிதாபப்பட்டிருப்பான். பன்னிரண்டரை மணிவரை காத்திருக்க வேண்டுமன்றோ...
வேறு வழி தெரியவில்லை. நூறு ரூபாய்க்கு ஒரு நாள் முழுச் சாப்பாட்டுடன் இலவசமாக சில நோய்களையும் தந்த கன்ரீனுக்கு சென்றேன். பூனைகள் இப்போதும் அங்கு இருக்கின்றன... இல்லையில்லை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக ஒரு பணிஸும் ஒரு சோடாவும் குடித்தேன்... செமித்திருக்க வேண்டும்.
என்னைக் கண்ட ஜூனியர்த் தம்பி ஒருத்தன் எதற்காக இங்கே வந்தாய் எனக் கேட்க முதலே அவன் நலம் விசாரித்து காரணமும் சொல்லி விட்டேன். "அப்போ சிங்கப்பூரோ... அல்லது இலண்டனோ..." அவன் பதில் கேள்வி இப்படித்தான் இருந்தது. எல்லோரும் சொல்லாமல் ஓடி விடுகிறார்களாம். நானாவது சொல்லிப்போட்டு போக வேணுமாம். ஆனால், இப்போது எனக்கு நாடு கடக்கும் உத்தேசம் எதுவுமில்லை. ஆனால், நாடு கடந்தாலும் சொல்லிவிட்டுத்தான் போவேன் என்றுமில்லை.
எங்கள் கம்பஸ் விளையாட்டு மைதானத்தில் தடகள விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அதன் காரணத்தினால் இருப்பதற்கு ஒரு மரநிழலில் ஓரிடம் கிடைத்தது. ஜோடித்தொல்லை இருக்கவில்லை...
பன்னிரண்டு மணிக்கு திரும்பவும் வந்து டிபார்ட்மென்ட் வாசலில் கால் கடுக்க காவல் காக்க ஆரம்பித்தேன். எங்களின் டிபார்ட்மென்ட் மூன்றாம் மாடியில் இருந்தது. நான் நின்ற இடத்திலிருந்து கீழே பார்த்தால் நிலத்தில் நடப்பன நன்றாக தெரியும்.
அங்கே எலக்ரிக்கல் டிபார்ட்மென்ட் முன்றலில் இரு நாய்க்குட்டிகள் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. அப்பாதை வழியே செல்பவருக்கு அவைகளின் தொல்லை தாங்க முடியவில்லை.
பெண்ணொருத்தி அவ்வழியே சென்றாள்... இரு குட்டிகளும் அவளைத் தொடர்ந்தன...அதையறிந்த அவளின் நடையில் வேகம் தெரிந்தது. குட்டிகளும் விடவில்லை... ஒரு கட்டத்தில் கூக்குரலிட்ட வண்ணம் அவள் ஓடினாள். ஒரு குட்டி முன்னால் சென்று வழிமறிக்க, பின்னால் சென்ற குட்டி குதி உயர்ந்த அவள் செருப்பைக் கவ்வியது. அவள் கையிலிருந்த பொருளினால் அடிக்க... கொஞ்சம் விலத்தி பின்னர் முன்னிலும் வேகமாக அவை அவள் பின்னால் ஓடின...
இப்போது எதிர்த்திசையில் இன்னொருத்தி வந்தாள். தாவணியை விட்டு விட்டு டெனிம் நோக்கி வந்தன குட்டிகள். அதே சேஷ்டைகள்... அவளும் இயன்றளவு முயன்றாள்... முடியவில்லை குட்டிகள் தானாக விலகும் வரை...
நான் அந்த இரு குட்டிகளினதும் சேஷ்டைகளை என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன். அவைகள் இரு பக்கத்திலும் தங்களுக்கான எல்லைகளை வகுத்து வைத்திருந்தன. எக்காரணம் கொண்டும் எல்லைகளை மீறியதில்லை. யாருமொருத்தர் அகப்பட்டால் எல்லைக்கோட்டின் நுனி வரை கலைத்துக் கொண்டு செல்கின்றன. திரும்பவும் அங்கிருந்து வரும் இன்னொருத்தரை எல்லைக்கோட்டின் அடி வரை கலைத்து வருகின்றன. இப்படியே மாறி மாறி ஓடும் அவைகளின் விளையாட்டைப் புரியாமல் போய்வருவோர் பட்டபாடு என்னைச் சிரிக்க வைத்தது.
நாய்களுக்கும் பெண்களைத்தான் பிடிக்குமோ...? இல்லையில்லை... வசமாக ஆண் சிங்கமொன்றும் மாட்டினான். அவன் தனது சிங்கத் தன்மையை நிரூபிக்க பலவாறு முயன்று ஈற்றில் நாய்க்குட்டிகளிடம் தோற்றுத்தான் போய்விட்டான். அவனையும் எல்லைக்கோடு வரை கொண்டு வந்துதான் விட்டன.
இப்போது குட்டிகளிடம் அகப்பட்டவள் சேலை அணிந்திருந்த ஒரு பெண்... நிச்சயமாக பல்கலைக்கழக விரிவுரையாளராகவோ அல்லது ஏதோவொரு மேலிடமாகவோ இருக்க வேண்டும். குட்டிகளுக்கு இது எங்கே தெரியப்போகின்றது...? அதே சேஷ்டைகள் தொடர்ந்தன... எல்லைக் கோட்டின் நுனி வரை தொல்லை கொடுத்த குட்டிகள் அதற்கப்பால் நகரவில்லை. பாவம்... அவள் நினைத்திருக்கவேண்டும் அது தன் திறமையென்று...
மேலிடத்துடன் முட்டியதன் விளைவாக திடீரென இரு சுத்திகரிப்பாளர்கள் வந்தனர். குழறக் குழற இரு குட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
ஒரு அலுவலகத்துக்கு இரு கதவுகள் இருப்பதற்காக மீளவும் அலுத்துக் கொண்டேன். ஒரு மணிக்கு 15 நிமிடங்கள் பிந்தி வந்த டிபார்ட்மென்ட் ஹெட்டை பின் தொடர அவர் மற்றைய கதவால் வெளியேறிவிட்டார். இன்னுமொரு 45 நிமிடங்கள்... ரசிப்பதற்கு நாய்க்குட்டிகளும் இருக்கவில்லை.
பத்து மணிக்கு தொடங்கிய காத்திருப்பு இரண்டு மணிக்கு முடிவுற்றது. பத்தாவது கையெழுத்தும் பெற்றாகிவிட்டது.
பசி வயிற்றை கிள்ள... ஒரு படியாக எல்லாம் முடிந்து விட்டது என பெரு மூச்சு விட்டவாறு கன்ரீனை நோக்கி நடையைக் கட்டினேன். எலட்ரிக்கல் டிபார்ட்மென்ட் இற்கு முன்னால் கால்களுக்குள் ஏதோ தட்டுப்பட்டன. ஆச்சரியம் எனக்கு... அதே நாய்க்குட்டிகள்... எல்லைக்கோடு வரை வந்தவை நான் அதனைத் தாண்டியதும் மறுபுறமாக இன்னொருத்தரை தொடர்ந்தன. திரும்பிப் பார்த்தேன். இப்போது தாய் நாய் வந்து நின்றது. நாக்கைத் தொங்கவிட்டவாறு தன் குட்டிகளை காவல் காத்தது. அதில் பிள்ளைகளை காவிக் கொண்டு வந்து மீள் குடியேற்றிய களைப்பு இளைப்பாக வெளித்தெரிந்தது.
மத்தியானம் சாப்பிட வந்த அந்த மேலிடப் பெண் பின்னேரம் ரீ குடிக்கவும் இந்தப் பாதையால் தான் வரவேணும்... என் மனம் ஏனோ விரும்பியது...!!!
Search This Blog
Sunday, August 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
//நான் அந்த இரு குட்டிகளினதும் சேஷ்டைகளை என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
ReplyDelete(நாய்க்)குட்டிகளின் சேஷ்டைகளை நல்லாவே ரசித்திருக்கிறீர்... நாலரை வருசங்கள் ரசித்தது போதாதோ..
நல்ல பதிவு.. தொடரட்டும்...
-செல்வம்
என்னவோ தெரியவில்லை.. எனக்கு மிகவும் பிடித்துபோய்விட்டது.. காரணம் அந்த நாய்க்குட்டிகளை கதைக்குள் கொண்டு வந்ததாக இருக்கலாம்.. அருமை
ReplyDeleteபத்து கையெழுத்து எதுக்கு...?
ReplyDeleteநல்லாதான் நாய்களையும் குட்டிகளையும் பாத்திருக்கிறீங்க...!
உந்த கையோப்பம் வாங்குற அனுபவம், மறக்கேலாது தான்.. உதுக்கெண்டு நாட்கணக்கா அலைஞ்சாக்களே இருக்கினம்.. நீங்கள் கொஞ்சம் பறவாயில்லை.. ஒரு நாளிலேயே முடிச்சிட்டீங்கள்..
ReplyDelete’குட்டிகளை’ பற்றி கதைச்சதால, சுவாரசியமாகத்தான் இருந்தது...
@நிமல்
ReplyDelete//பத்து கையெழுத்து எதுக்கு...?
1.நூலகர்
2.உதவிப் பதிவாளர்
3.விடுதிப் பொறுப்பாளர் - இவரின் கையொப்பம் வாங்க வேண்டுமெனில்,
4. உதவி விடுதிப் பொறுப்பாளர்
5.டிபார்ட்மென்ட் ஹெட் - இவரின் கையொப்பம் வாங்க வேண்டுமெனில்,
6. வசந்த
7. ஜினதாச
8. அனுரா
9. இராஜபக்க்ஷ
10.பெயர் ஞாபகமில்லாத இன்னொரு ஆய்வுகூட உதவியாளர்
உதவிக் குறிப்பு: டிபார்ட்மென்ட் இல் எல்லோரும் (ஹெட் உட்பட) final year project group ஐ கரிசனையோடு விசாரித்து 05 batch பெயர்ப் படிவங்களை புரட்டத் தொடங்கினார்கள். நான் 04 batch என்றதும் மூடி வைத்துவிட்டு எதுவும் பேசாமல் கையொப்பம் வைத்து தந்தார்கள்.
இவர்களிடம் கை எழுத்து வாங்கி முடிப்பதற்குள் தலை எழுத்தே சில வேளைகளில் மாறி விடலாம் போல இருக்கிறது. அவசரத்துக்கு உடனடியாக பெற வேண்டும் என்றால் என்ன செய்வதோ....
ReplyDeleteபதிவு அருமை.
நாய்க்குட்டிகள் அருமை.. நாமளும் கையெழுத்து வாங்கச் செல்ல வேண்டும் ..பார்ப்போம்..
ReplyDeleteகையெழுத்து வாங்கப் போன கையோட உள்ளர்த்தம் கனக்க உள்ள கதையைச் சொல்லி இருக்கிறியள்... (அதுசரி இராஜபக்ஷவிட்டயெல்லாம் கையெழுத்து வாங்கியிருக்கிறியள்... எந்த இராஜபக்ஷ எண்டு சரியாச் சொல்லோணுமெல்லே....)
ReplyDeleteNaai kutty kathai nalla irukku,They have their own area & they dont cross it,nice info.
ReplyDelete””மத்தியானம் சாப்பிட வந்த அந்த மேலிடப் பெண் பின்னேரம் ரீ குடிக்கவும் இந்தப் பாதையால் தான் வரவேணும்... என் மனம் ஏனோ விரும்பியது...!!!””
ReplyDeleteஏனென்றால் சேலை அணிந்திருந்ததால் என்னவோ?
நாய் குட்டிக்கதைகளுடன் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்
எனக்கு பிடித்துவிட்டது