Search This Blog

Wednesday, October 7, 2009

இதுவும் கடந்து போகும் - அவதியுறும் அகதி வாழ்வு

பல்கலைக்கழக வாணி விழா(2009) கவியரங்கக்கவிதை.
அவதியுறும் அகதி வாழ்வு எனும் தலைப்பின் அறிமுகமாக என்னால் பகிரப்பட்ட கவிதை இது.

புரிகிறது...
இந்த அமைதிக்கு அர்த்தம் புரிகின்றது.

இனிப் பேசும் வார்த்தைகள் கூர்மையானவை...

துரோகி... பயங்கரவாதி...
இரண்டுக்கும் நடுவே
அப்பாவியாக கவிதை சொல்ல வேண்டும்.
ஆனாலும்,
அப்பாவிகள் தானே எங்கும் முதல் இலக்கு..!!!

அந்த மூன்று நாட்கள் - என்
தேசக் கடிகாரம் முப்பது வருடங்களை
இடஞ்சுழியாக ஓடிக்களைத்து
இன்று தாகத்துக்கு நீர் கேட்கின்றது...

மன்றாடிக் கேட்கின்றேன்...
ஆராய்ச்சிகளையும் ஒப்பாரிகளையும் நிறுத்தி விடுங்கள்...

நாங்கள் பட்டு வேட்டிக் கனவில் கிடந்த போது
சிலுவை சுமந்தார்களே...
நாம் இணையத்தில் பாட்டுக் கேட்டு சுதந்திரம் வேண்டிய போது
அதற்காக தீயினில் வெந்தார்களே...
நாளை வரும் நாம் நிமிர்வோம் எனக் காத்திருந்தது
தூர விலகினாலும்,
அதற்காக உயிரையும் கொடுத்தார்களே...
இன்று அடைபட்டுக் கிடக்கும் அந்த மக்களுக்காக
குரல் கொடுங்கள்...

அகதி வாழ்வு...
அது நேற்று வந்தது அல்ல...
91 ஜூலை மாதத்தில் ஓர் நாள்
என் பெயர் முன்னும்
வந்து குந்திய அடையாளம்
இன்றும் தொடர்கின்றது...

வீடிழந்து...
ஊரிழந்து...
உறவிழந்து...
தொடருகின்ற எங்கள் அவலப் பயணத்தில்
கணிதவியலாளனாய் சிந்தித்தால்
வர்க்கமுமல்ல... கனமுமல்ல...
இது அகதி வாழ்வின்
எத்தனையோ அடுக்கு...!!!

நீண்ட நெடும் பயணத்தில்
மீண்டும் வந்து பூச்சியத்தில் நிற்கின்றோம்.
குஞ்சு குருமன் எல்லாம்
விலையாகக் கொடுத்துவிட்டு
பிச்சைப்பாத்திரம் எங்கள் கரங்களில்...

தியாகங்கள்...
வரலாறுகள்...
எல்லாவற்றையும் பேசுங்கள்
குறை சொல்லவில்லை...
ஆனால்,
செல்லடித்து செத்து வந்தவர்களை - உங்கள்
சொல்லடியால் சாகடிக்காதீர்கள்.

நம்பிக்கை தானே வாழ்க்கை...
அந்த நம்பிக்கையின் மீதேறி சொல்கின்றேன்
இந்த அவலமும் ஓர் நாள் கடந்து போகும்.

9 comments:

  1. மா. குருபரன்October 7, 2009 at 3:47 AM

    /"நாங்கள் பட்டு வேட்டிக் கனவில் கிடந்த போது
    சிலுவை சுமந்தார்களே...
    நாம் இணையத்தில் பாட்டுக் கேட்டு சுதந்திரம் வேண்டிய போது
    அதற்காக தீயினில் வெந்தார்களே...
    நாளை வரும் நாம் நிமிர்வோம் எனக் காத்திருந்தது
    தூர விலகினாலும்,
    அதற்காக உயிரையும் கொடுத்தார்களே...
    இன்று அடைபட்டுக் கிடக்கும் அந்த மக்களுக்காக
    குரல் கொடுங்கள்..."/

    யதார்த்தம்...... எதுவரை இழக்க முடியுமோ அதுவரை இழந்துவிட்டோம்...

    நன்றாக இருக்கிறது நண்பரே...

    ReplyDelete
  2. //கணிதவியலாளனாய் சிந்தித்தால்
    வர்க்கமுமல்ல... கனமுமல்ல...
    இது அகதி வாழ்வின்
    எத்தனையோ அடுக்கு...!!!//

    உண்மை

    //செல்லடித்து செத்து வந்தவர்களை - உங்கள்
    சொல்லடியால் சாகடிக்காதீர்கள்.//

    இது அன்று நடக்காமல் இருந்திருக்கலாம் :-(

    ReplyDelete
  3. "செல்லடித்து செத்து வந்தவர்களை - உங்கள்
    சொல்லடியால் சாகடிக்காதீர்கள்."
    அது தான் இங்கு எப்போதுமே நடக்கிறதே.. மலிவானவற்றில் இதுவும் ஒன்று..பேச்சால் மட்டுமே தாம் வேன்ருகொண்டிருக்கிறோம் என்று நினைப்பவர்களை எப்படித் திருத்த முடியும்..

    ReplyDelete
  4. உங்கள் பார்வையும் நம்பிக்கையும் பெருமையைத் தந்தாலும், மனது கனத்து விட்டது..


    //துரோகி... பயங்கரவாதி...
    இரண்டுக்கும் நடுவே
    அப்பாவியாக கவிதை சொல்ல வேண்டும்.
    ஆனாலும்,
    அப்பாவிகள் தானே எங்கும் முதல் இலக்கு..!!!//
    விரக்திக்கும் வெறுப்புக்கும் மத்தியில் ஏதாவது உணர்விருந்தால் அது தான் இப்போதைய நிலை.

    ReplyDelete
  5. //துரோகி... பயங்கரவாதி...
    இரண்டுக்கும் நடு//

    ஆதிரை,

    துரோகி மஞ்ச துண்டு என்று புரிகிறது.பயங்கரவாதி?சீமானா,வீரமணியா,திருமாவா,நெடுமாறனா?

    ReplyDelete
  6. @மா.குருபரன்
    // யதார்த்தம்...... எதுவரை இழக்க முடியுமோ அதுவரை இழந்துவிட்டோம்...//

    இந்த யதார்த்தங்கள் பலருக்கு இன்னும் புரியவில்லையே...


    //நன்றாக இருக்கிறது நண்பரே...//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. @Subankan
    //
    //செல்லடித்து செத்து வந்தவர்களை - உங்கள்
    சொல்லடியால் சாகடிக்காதீர்கள்.//

    இது அன்று நடக்காமல் இருந்திருக்கலாம் :-(
    //


    @Sinthu
    //அது தான் இங்கு எப்போதுமே நடக்கிறதே.. மலிவானவற்றில் இதுவும் ஒன்று..பேச்சால் மட்டுமே தாம் வேன்ருகொண்டிருக்கிறோம் என்று நினைப்பவர்களை எப்படித் திருத்த முடியும்..//

    இதுக்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரமாம். :(

    ReplyDelete
  8. @Loshan
    //விரக்திக்கும் வெறுப்புக்கும் மத்தியில் ஏதாவது உணர்விருந்தால் அது தான் இப்போதைய நிலை.//

    ம்ம்ம்... அதே வெம்மை கனத்த பெருமூச்சுக்கள் தான் திருப்பித் தருவதற்கு என்னிடம் உள்ளன.

    ReplyDelete
  9. @chinnappenn500

    பலர் பலவாறு கொடுக்கின்றார்கள். விரும்பினால், நீங்களும்....

    ReplyDelete

You might also like