Search This Blog

Monday, December 1, 2008

வலைப்பதிவுக்குள் நான்

வணக்கம்!

நீண்டநாள் கனவொன்று நனவாகும் வேளையில் உங்களுடன் வலைப்பூவின் வழியே பேசுவதில் ரொம்ப மகிழ்ச்சி..!

என் உணர்வுகள், நான் கடந்து வந்த பாதைகள், அதில் விதைத்துவிடப்பட்ட முட்கள், என் சுற்றம், என் தாய்நாடு இவைகள் பற்றி என் உள்ளக்கிடக்கையில் குடிகொண்டிருக்கும் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ரொம்பநாள் ஆசை. ஆனால், என் எண்ணங்கள் எல்லாம் உள்ளன உள்ளவாறு வெளியிட என்னைச்சூழ்ந்துள்ள சில இனந்தெரியாதவைகள் அனுமதிக்காது என்பதும் நான் உணர்வேன். அதை எல்லாம் மீறி நான்கு சுவருக்குள் என் மீதிக்காலத்தை கழிப்பதற்கும் நான் தயாரில்லை. அத்துடன் உயிராசை துறந்தவனுமல்ல... என்றாலும் பேசவேண்டிய சிலதுகள் பேசப்பட்டேயாக வேண்டுமல்லவா? அவை இங்கு பேசப்படும்.

எனக்கென்றொரு வலைப்பதிவு சொந்தமாக்கப்பட வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாகவே என்னுள் குடிகொண்டிருந்தது. ஆனால், நான் தயாராகும் போதெல்லாம் ஏதோவொரு இடையூறு எப்படியோ வந்துவிடும். பல்கலைக்கழகத்தின் இறுதி வருட அரையாண்டுகளில் முதல் முயற்சி... கற்கவேண்டிய பாடப்பரப்பு சிறிதென்ற கனவுடன் முதல் பதிவும் எழுதினேன். ஆனால், இறுதி வருட project இன் பயமுறுத்தல்களுக்கிடையே தொடர முடியவில்லை. இறுதி வருடம் நிறைவு பெற்றபின், அடுத்த முயற்சி... ஆனால், புதுத்தொழில்!!! அங்கேயும் படிக்க நிறையவே இருக்க அடுத்த சறுக்கல்.

ஆனாலும், தமிழ்ப்பூங்கா உறுப்பினரொருவரின் வேண்டுகோளுக்கிணங்க - அவர் அறிவுறுத்தலுக்கமைய ஒரு சில ஆக்கங்களை அத்தளத்தில் பதிவிட்டுக்கின்றேன். சில வலைப்பதிவுகளில் என் எண்ணங்களும், உணர்வுகளும் பின்னூட்டங்களாயின.

இறுதியாக, கடந்த மாதத்தில் ஒரு நாள்... நன்றாக நினைவிருக்கிறது அது ஒரு சனிக்கிழமை... முதல் நாள் வெள்ளி இரவு நித்திரை மறந்து நான் எழுதிய முதல் பதிவுடன் இணையத்துக்குள் நுழைகின்றேன். நம்ப முடியவில்லை...

பதிவுலகத்திற்குள் கால் வைத்து குறுகிய காலமாயினும், நான் யாருடைய வலைப்பதிவை தினமும் ரசித்து வாசிப்பேனோ - என் முன்னோடி என்று கூடக் கூறலாம்... தினமும் பதிவிடும் அத்தளத்தில் அந்தச்சனிக்கிழமை பதிவின்றிய ஒரு வெறுமை...

அதிர்ச்சி... கவலை... ஒருவித பயம்... எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டேன்.

அந்த வேதாளம் முருங்கை மரக்கதை போல இப்போது மீண்டும் வருகின்றேன். அந்தச்சனி நடந்த சம்பவம் நிச்சயமாக எனக்குள் ஒருவித வடிகட்டல்கள் தேவைப்பட்டதை உணர்த்தியது. அந்த வடிகட்டல்களுடன் தான் உங்களிடம் வருகின்றேன்... (காலம் மாறாதவரை)வருவேன்...

தினமும் நான் புத்தகக்குறியிட்டு வாசிக்கும் வலைப்பதிவுகளில் ரகுபதிபாலஸ்ரீதரன் வாமலோசனனின் 'Loshan', சயந்தனின் சாரல், பகீயின்ஊரோடி, கானா பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி, தூயாவின் தூயா,நிமலின் TalkOut in Tamil என்பவை குறிப்பிட்டு சொல்லக் கூடியவை. இவை என்னுள் ஏதோவொரு பாதிப்பினை ஏற்படுத்தியவையாக, என் அறிவு சார்ந்த தேடலுக்கு தானம் வழங்குபவையாக, அல்லாதுவிடின் என் கதை பேசும் தளங்களாக இருக்கின்றன.

எனக்குள் புதியதொரு உலகத்தில் பிரசவிக்கப்பட்ட உணர்வு. தவள வைப்பதும்... நடை பழக்குவதும்... என் கை பிடித்து 'அ' எழுதுவதும்... பிழை செய்தால் (நோகாமல்) குட்டித்திருத்துவதும் நீங்கள் தான் நண்பர்களே...

6 comments:

  1. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. :)

    ReplyDelete
  2. வாருங்கள் ஆதிரை.. இந்த பெயர்களில் பின்னூட்டு காணும் போதெல்லாம் தமிழகத்திலிருந்து ஒருவர் எனதான் இப்ப வரை நினைத்திருந்தேன். ஏனென்டு தெரியல :(

    வழமையாக பதிவுகள் எழுத ஆரம்பிப்பவர்களை பார்த்து வாழ்த்துகள் என கூறுவதுண்டு. இங்கே கவனம் என கூற வேண்டியிருக்கிறது :(

    கவனம்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.... ரசனையான உயிர்புள்ள வரிகள்.. தொடருங்கள்...

    ReplyDelete
  4. சுபானு, பிறைதீசன்
    நன்றிகள்.

    சயந்தன்,
    அக்கரையில் இருப்பினும், எம்மேல் கொண்ட அக்கறைக்கு உங்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  5. ஆதிரை,

    தொடர்ந்து வலைப்பதிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நன்றிகள் ஊரோடி.

    ReplyDelete

You might also like