Search This Blog

Wednesday, December 3, 2008

இந்தியாவுக்கு தரைவழிப்பாதை

இன்று இரவு லண்டனிலிருந்து தொலைபேசி அழைப்பு... எதிர் முனையில் என் கல்லூரி நண்பன். வழமையான குல விசாரிப்புக்களுடன் ஆரம்பமாகியது எங்களின் உரையாடல்...

பல்கலைக்கழக வாழ்க்கை... விடுதியில் நாங்கள் செய்த அட்டகாசங்கள்... பல்கலைப்படிப்பு நிறைவு பெற்று வந்த போதும் அதே இளமைத்திமிருடன் கடந்த மாதம் நாங்கள் ஜெயித்த துடுப்பாட்டக்கிண்ணம்... தேவதைகள்... பல்கலைத்தம்பி தங்கைகள்... இப்படிப் பலவாறாக பல்வேறு விடயங்களைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கும் போதுதான், குறி வைத்து அடிப்பார்கள் என்று சொல்வார்களே அப்படி ஒரு கேள்வி!!!

என்ன இந்தியாவுக்கும் பாதை திறக்கப் போறார்களாமே........???

மேற்கொண்டு அதே உற்சாகத்துடன் சம்பாசனை தொடர முடியாத நிலை எனக்கு. வழமை போல இப்படியான இடக்கு முடக்கு கேள்விகளுக்கு நான் வைத்திருக்கும் பதில் 'ம்... ம்...'. இதையே அவனுக்கும் பதிலாய் சொன்னேன். அவன் அத்தோடு விட்டானா? மாடு எந்தப்பக்கம் விழுந்தாலும் குறி சுடுவார்கள் என்று சொல்வார்களே. அதே ரகம் தான் இவன்... நற்செய்தி ஏதுமாயின் கூட இருந்து ஆரோகரிப்பான். தப்பாக நடந்தால் தள்ளி நின்று விமர்சிப்பான்.

நான் கேட்டுக்கொண்டிருக்க அவன் பேசிக்கொண்டேயிருந்தான். 90களுக்குப் பிறகு புகையிரதமே என்னவென்று தெரியாத மன்னாரில் ஒரு தரிப்பிடம்... இந்தியாவுக்கான தொடரூந்துப்பாதைக்கான செலவு... கட்டியமைக்க எடுக்கும் காலம்... ஏன் நேரசூசியும் தான்... நிறுத்தாமல் அவன் எல்லாத்திட்டங்களையும் எடுத்துவிட்டுக்கொண்டிருந்தான். உண்மையில் தான் பேசுகின்றானா? அல்லது எரிச்சலூட்டுகின்றானா? புரியவில்லை. திடீரென தொடர்பு துண்டிப்பு... கார்ட் முடிந்திருக்க வேண்டும்...

அப்பாடா என்று நிமிர்ந்த வேளையில் மீண்டும் தொலைபேசியின் சிணுங்கல்!!! இது யாழ்ப்பாணத்திலிருந்து... எப்போதாவது இருந்திட்டு எட்டிப்பார்க்கும் கைத்தொலைபேசி சமிக்ஞைகளின் நடுவே அந்தப் பிஞ்சு எனக்கு அழைப்பு எடுக்கத்தவறுவதேயில்லை.

"அண்ணா... சுகமாக இருக்கிறீங்களா...?"

"ம்... நீங்கள் என்ன செய்கிறீங்கள்? இரவு என்ன சப்பாடு...?"

"இந்த மாதம் 25ம் திகதி பேர்த்டே. கட்டாயம் வரணும்..." எனது சுக விசாரிப்பைக் கணக்கெடுக்காத அவசர வேண்டுகோள்.

"ம்.. வருகின்றேன்" என்னிடமிருந்து வெறுமையான பதில்.

"இரண்டு வருசமாய்ச் சொல்றீங்கள்... ஆனால், வரயில்லை. பிளீஸ் அண்ணா... இந்த முறையாவது வாங்கோ"

இந்த வருடமும் வருவதற்கு பாதை இல்லையென்று கூறினால், பதில் என்னவென்று அவள் புலமை புரிந்த எனக்குத் தெரியும். ஆனால், அதற்கிடையில் யாழ்ப்பாணத் தொலைபேசி சமிக்ஞை அந்தப்பிஞ்சிடமிருந்து என்னைப் பதிலளிக்காமல் காத்துவிட்டது.

இப்போது தொலைபேசியில் குறுஞ்செய்தி... அந்த நண்பனிடமிருந்து வந்திருந்தது. இந்தியாவுக்கு புகையிரதம் ஓடும்போது தனது காதலியை யாழிலிருந்து அழைத்து இந்தியாவில் திருமணமாம்.
பதில் அனுப்பினேன்... "வாழ்த்துக்கள் நண்பா"

எவ்வளவோ கேட்டிட்டம்... இதைக் கேட்கமாட்டமா?

4 comments:

  1. //
    எவ்வளவோ கேட்டிட்டம்... இதைக் கேட்கமாட்டமா?
    //
    சில சமயம் சகிப்புத் தன்மையை வளர்த்துக்கொள்ள இது உதவும் ஆதிரை... :)

    ReplyDelete
  2. எனக்குரியதை ஒபாமாக்கள் பறித்துக்கொண்டார்கள். கேட்டால் ஒசாமாக்கள் என் நண்பனாகிவிடுகின்றார்கள்.//

    இது.... அது!

    ReplyDelete
  3. ஏக்கங்களை பிரதிபலிக்கும் வரிகள்...
    //என்ன இந்தியாவுக்கும் பாதை திறக்கப் போறார்களாமே........
    //
    எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதை இப்படிக்கூறி ஆறுதல் அடைவதும் ஒரு ரகம்...

    ReplyDelete
  4. சுபானு, சயந்தன், பிறைதீசன்
    உங்களின் வருகைக்கும் விதைத்துச் சென்ற கருத்துக்களும் நன்றிகள்.

    பிறைதீசன், இந்தியாவுக்கு பாதை திறந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், அதற்கு முன்னம் திறப்பதற்கு நிறையவே இருக்கிறது.

    ReplyDelete

You might also like