விழி மூட மறந்த நேற்றைய பின்னிரவில் எங்கோ ஆரம்பித்த கதை சூடான கருத்துக்களுடன் ஆன்மிகத்தில் வந்துநின்று போகும் வழி தெரியாது திக்குமுக்காடுகின்றது. இறைவன் இருக்கின்றானா? இல்லையென்று என் நண்பனும், ஏதோவொன்று அப்படி இருக்கின்றது என நானும் நேற்றைய இரவு நித்திரையைத் தொலைத்திருக்கின்றோம். ஆனாலும், என் கருத்துக்கள் தான் முடிவுரைக்கு முத்தமிடும் தூரத்தில் நிலையெடுத்திருக்கின்றன.பாடசாலைக் காலத்தில் அவன் மூளைக்குள் உட்புகுவதற்குச் சிரமப்பட்ட விஞ்ஞான விளக்கமெல்லாம், இப்போது அவன் கேள்விகளாயிருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில், அவன் இப்போது பொறியியலாளன். பூச்சியத்தையும் பூச்சியத்தையும் சேர்க்கும் போது பூச்சியம் தான் கிடைக்கும் என்பதையும் நிறுவப் பழகியவன்.
கடவுள் என்று கத்துகிறீர்களே... அதை உன்னால் காட்ட முடியுமா? அல்லது, உணரத்தான் முடிந்ததா...? அன்பே சிவமென்று உபதேசம் செய்துவிட்டு இரத்த வெறியுடன் மதக்கலவரம் புரிகின்றீர்களே...! பணமிருந்தால் தான் இறைவன் கண் திறப்பான் எனும் விதிக்கு எதிர் விதி இருக்கா...? அன்பைச் சொன்ன ஆலயங்களில் அக்கிரமங்களும் முளைவிட்டனவல்லவா...? மரணப்படுக்கையிலும் நீங்கள் அழைக்கும் கடவுளால் ஏன் நவாலியிலும் மடுவிலும் உங்களுக்கு மரணத்தைத்தான் தர முடிந்தது...?
அவன் தொடுத்த வினாக்கள் இவை. கேட்டவைகளின் பின்னால் இருக்கும் நியாயத்தை நான் மறுக்கவில்லை. ஆனாலும், இறைவன் இன்னும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை என்னுள் இன்னும் இருக்கின்றது.
என்னை ஒரு சக்தி இயக்கிக்கொண்டிருப்பதாய் உணர்கின்றேன். அதற்குத்தான் நான் இடும் பெயர் கடவுள். நெருப்பைத் தொட்டால் சுடும் என்றும், ஆழ்கடல் என்னை அமிழ்த்தும் என்றும், உதடு வரை வந்த சில விடயங்கள் என் பேனாவுக்குள் நுழைதல் ஆகாது என்றும் என்னைப் பின்னால் நின்று இயக்கும் அது என்ன...? பூமி தன்னைச் சுற்றி சூரியனையும் வலம் வருகின்றதே... அறிவியலால் பாதையையும் அதன் காலத்தையும் தான் கணிக்க முடிந்ததாயின் அந்த இயக்கத்தின் முதல் என்ன? பூமிக்கொரு ஈர்ப்புசக்தி இருப்பதாய் சொன்ன விஞ்ஞானம் அந்த ஈர்ப்பு சக்தியைக் கொடுத்தது யாரென்று சொல்லட்டும்.
ஆனால், நண்பன் சொன்ன அந்த மதக் கலவரங்களும், மரணங்களும், போலிச்சாமியார்களும் எங்களுக்குள் இருந்துதான் முளைத்தவை... தங்கள் இருப்புக்கு கடவுளை த் துணைக்கழைத்தவாறு. அது தான் சாபம்...!
அப்படியாயின் விநாயகர், சிவன், யேசு, நபி, புத்தன் இவர்கள் யாரென்று கேட்டால் என் பதில்... நாளை இந்த நாமங்கள் மறைந்து போக, இவர்கள் தான் கடவுளர்களின் உருவங்களென நெல்சன் மண்டேலாவுடன் இன்னும் சில சுதந்திர புருஷர்களின் பெயர்களை நான் பட்டியலிடுவேன். வேண்டுமாயின், சாத்தானையும் அரக்கர்களையும் புஷ்ஷும் இன்னும் ஒரு சிலரும் பிரதியீடு செய்யலாம்.
அப்போது அன்று இருக்கும் விஞ்ஞானம் தன் இனத்துக்காக அவர்கள் தங்களின் உயிர்களைத் தானம் செய்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் ஆராய்ச்சிகளின் படி நிறுவச் சொல்லும்போது... அகழ்வாராய்ச்சிக் கல்லறைகள் சில உண்மைகள் உரைக்கலாம்!
ஆனால், வல்லவர்களின்(?) கரங்களினால் எங்களின் வரலாறு வேண்டுமென்றே பொத்தி மறைக்கப்படுவது கவலையைத்தருகின்றது. கம்பனின் கவிநயத்தில் சிவபக்தனான இராவணன் எப்படி அரக்கனாக சித்தரிக்கப்பட்டானோ அப்படியே எங்களின் வரலாறுகளையும் அவர்கள் எழுதிவிட்டால்....? சிந்திக்கவும்!!!
***
அது 2004ம் ஆண்டு... இலங்கையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலம். பல்கலை விடுமுறை நாளொன்றில் முகமாலை தாண்டி மாமாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
மாமாவின் மூத்த மகன் அப்போது அவனுக்கு வயது ஒன்பது. காலையில் கடவுளை வணங்கியவாறு அந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு படத்துக்கும் பூ வைத்தவாறு வருகின்றான். சில கடவுள் படங்கள். ஒரு சில மரணித்தவர்களினது. ஆனால், அங்கு எல்லா வீட்டிலும் ஒரு நாட்காட்டி சுவரில் மாட்டப்பட்டிருக்கும் என்பது ஏனோ எழுதப்படாத விதி. நிச்சயமாக அது இறைவனின் படத்தைக் கொண்டிராது. அவன் தெரிந்தோ தெரியாமலோ அந்த நாட்காட்டியிலும் பூச்சூட்டியவாறு நகர்கின்றான். அவனை அழைத்துச் சொன்னேன். "கடவுளருக்கும் மரணித்தவர்களுக்கும் தான் பூ வைக்க வேண்டும். உயிருடன் இருப்பவர்களுக்கு அல்ல...". பட்டென்று சொன்னான் ஒரு பதில். "கடவுளுக்குத்தான் நான் பூ வைத்தேன்." கூர்ந்து பார்த்தேன் அந்த நாட்காட்டிப் படத்தை... சத்தியமாக அவருக்கும் சினிமாவுக்கும் கூட ஒரு துளி சம்பந்தமுமில்லை!!! அந்தக் கடவுள் யார்...?
( 2004 - டிசெம்பர்-26 அன்றைய நாளுக்குப் பின்னர் அந்தப் பாலகனும் எங்கள் வீட்டில் பூச்சூடிய படமாக...)
கலக்கிறிங்க
ReplyDeleteWow
ReplyDeleteசூப்பர் touch பண்ணிறிங்கள்
ReplyDeleteநல்லா இருக்கு.... சூப்பர்....
ReplyDeleteHajan, Bavan, Tharsan & பிறைதீசன்,
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...