Search This Blog

Wednesday, May 5, 2010

கோழிப்புக்கை - ஒரு ஒப்புதல் வாக்குமூலம்


தலைப்பை கோழிப்பொங்கல் என்று இட வேண்டுமா என எண்ணுகின்றேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரைக்கும் தைப்பொங்கலுக்கு காய்ச்சிப் படைப்பது எங்களுக்கு புக்கையாகத்தான் இருந்தது. ஆனால், கொழும்புக்குள் நகர்ந்த போது - வேறொரு மொழியை உள்வாங்கிய போது உச்சரிக்கப்படக்கூடாத ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட தெரிந்த முதல் பதம் இந்த புக்கை தான். வேற்று மொழி பழகிய ஆரம்ப காலங்களில், தெரியாத்தனமாக வாய்க்குள் தட்டுத்தடுமாறி வரும் போதெல்லாம் சகோதர மொழி நண்பனுக்குப் புரியாமல் விழுங்குவதில் உள்ள சங்கடம்... அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

”அடேய்... வடமராட்சியில் கோழிப்புக்கை என்று ஒரு சாப்பாடு செய்வாங்களாமே. உனக்குத் தெரியுமா...?” பல்கலைக்கழகத்தில் இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன் கேட்ட நண்பனுக்கு என் பதில் இப்படித்தான் இருந்தது. “தெரியுமாவா...? வீட்டிலே பானை பானையாய்க் காய்ச்சிக் கொட்டுவாங்கள்...! ஏ9 பாதை திறக்கும் போது கட்டாயம் வா... செய்து தரலாம்.”

கோழிப்புக்கையின் ருசி மட்டுமல்ல... அதன் நிறம் கூட என்னவென்று அறியாத நான் இப்படிச் சொல்லவும் ஒரு காரணம் இருந்தது. அது... எப்போது இந்தப் பாதை திறந்து, எப்போது இவர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள் என்ற அதீத நம்பிக்கைதான். குறைப்படாதீர்கள்...! அந்த நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல... அப்போது எல்லோருக்கும் தானே இருந்தது.

வடமராட்சியின் சில ஊர்கள் எப்போதும் சில உணவுப்பண்டங்களின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு, பருத்தித்துறை வடை, நாகர்கோவில் நாவற்பழம், வடமராட்சி கிழக்கின் கரைவலை மீன்.... இலண்டன் சந்தைகளிலும் இவற்றுக்கு கிராக்கி அதிகமாம். அங்குள்ள வல்வெட்டித்துறை நண்பன் புளுகியிருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்கின்றேன்.

நான்கு வருடங்களுக்கு முதல் கேட்டதை ஞாபகம் வைத்திருந்தவன் அன்றைக்கு அழைப்பெடுத்தான்.
“மச்சான் நாங்களும் யாழ்ப்பாணத்தில் தான் நிற்கிறோம். கொழும்பிலேயிருந்தும் கொஞ்சம் இறக்குமதியாகியிருக்கிறாங்கள்... நாளைக்கு வடமராட்சி வாற ஐடியா. மணற்காட்டுக் கடல்... பிறகு உன் வீட்டிலே கோழிப்புக்கை மத்தியானச் சாப்பாடு...”

கிழிஞ்சுது போ... வேறு வழி தெரியவில்லை... தொலைபேசி ஆமென்று பதில் சொல்லி அணைவதைத்தவிர!!! பத்து செக்கன் உரையாடலின் முடிவில் கைத்தொலைபேசி நூறு டிகிறியில் சுட்டது.

அம்மாவைப் பார்த்தேன்... ம்கூம்... என் மானப் பிரச்சினையின் வீரியத்தை விளங்கப்படுத்தி, முடியாவிட்டால் சக்கரைப்பொங்கலாவது காய்ச்சுங்கோ என்றேன்.

★ ★ ★

வல்லிபுரக்கோவிலின் சுற்றாடலில் கிளைவிட்டு நின்ற பனைமரத்தை தரிசித்த வண்ணம் மணற்காட்டுக் கடலை அடைந்தாயிற்று.


மணற்காடு என்றதும் எப்போதும் பதினாறு வயது இளங்குருத்தொன்றுதான் என் ஞாபகத்திரைகளில் தோன்றி மறைவான். 1993 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். கப்பல் வடிவிலான ஊர்தியில் பவனி வந்த அவனுக்கு காத்திருந்து பூக்கள் சொரிந்ததும் - அந்தப் பூ வாங்கிப் போட்டவள் இன்னொரு நாள் அதே மாதிரிக்கப்பலில் பவனி வந்ததும் மனது மறக்காத வரலாறுகள்.

வெயில் சுட்டெரித்தது... ஆனாலும், கடல் நீர் இதமாகத் தான் இருந்தது. மூன்று மணித்தியாலங்கள்.... அருமையான பொழுது. கடலுக்குள் நாங்கள் தாண்டு போனாலும் தூக்குவதற்கென்று துணையொன்றைக் கரையில் இருத்தி விட்டு கும்மாளம் நடந்தது. பாவம்.... எங்கள் போட்டோப் பிரியன்.

அந்த மண் மலை, சவுக்கம் தோப்பு, தூர்ந்து போன மணலில் இருந்து வெளிப்படும் தேவாலயம், எங்களுக்காய் உயிர் துறந்த நண்டு, ஒரு துண்டு எச்சமுமின்றி துடைத்து வழித்த இடியப்பமும் சொதியும்.... என்றைக்கும் மறக்காது!!!


இதிலே இன்னொன்றையும் மறைக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும். அன்றைக்குத்தான் நானும் முதன் முதலாய் மணற்காட்டுக்கடலில் கால் நனைத்தேன். ஆனாலும், நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த வழிகாட்டியாய் நடித்ததை எண்ணி இப்பவும் பிரமிக்கின்றேன்.

அடுத்ததாய் மதிய உணவு... அது தான் கோழிப்புக்கை. என்ன நடந்ததென்று நான் சொல்வது சுயதம்பட்டம் அடிப்பது போலாகிவிடும். ஆனாலும், கூடவே ஒரு மூடை சீனியும் வாங்கி வைத்திருக்கலாம் என நண்பர்கள் உணர்ந்ததை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுடன் கூட இருந்து உண்டவன் தானே நானும்.

ஊர் சுற்றிப்பார்க்கவென வந்தவர்கள் கோழிப்புக்கை சாப்பிட்ட மறுநாள் ஓய்வெடுத்து வீட்டில் தங்கியிருந்தார்களாம்... நல்லது தானே!!! ம்ம்ம்.... யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிற்கின்ற மின்சாரம் போல தண்ணிக்கு அந்தப் பிரச்சினை இல்லை. தப்பிக் கொண்டார்கள்.

கடந்தது கடந்து போகட்டும்...!!! எந்தளவுகளில் தூள், கடுகு, மிளகு, பச்சை மிளகாய் இடுவதென இப்போது அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.... இரண்டாவது தடவையாக இன்னொரு தரம் சமைப்பதற்கு தயாராக இருக்கிறாளாம். ஆகவே, அடுத்த தடவை வரும் போதும் மறக்காமல் வந்திடுங்கள்...!!!

10 comments:

  1. ha ha...
    ROFL....

    // தெரியுமாவா...? வீட்டிலே பானை பானையாய்க் காய்ச்சிக் கொட்டுவாங்கள்...! ஏ9 பாதை திறக்கும் போது கட்டாயம் வா... செய்து தரலாம். //

    Hee hee... Peter... :D


    // என் மானப் பிரச்சினையின் வீரியத்தை விளங்கப்படுத்தி, முடியாவிட்டால் சக்கரைப்பொங்கலாவது காய்ச்சுங்கோ என்றேன். //

    :D

    Haiyo haiyo...

    Nice one Aathirai anne... ;)

    Will be back in Tamil shortly... :D

    ReplyDelete
  2. ஹி ஹி...

    அண்ணே... கலக்கல்...

    சொந்தக் கதை சோகக்கதைய நகைச்சுவையில வடிவாச் சொல்லியிருக்கிறியள்...

    அப்புறம் ஒரு விசயம்,
    மருதமூரான் அண்ணா உங்களை கொலைவெறியுடன் தேடுவதாக ஒரு தகவல்...
    பின்ன,
    நட்சத்திரமாகி இது இரண்டாவது பதிவு தான்.
    எதுக்கும் அடிக்கடி பதிவு போடுங்கோ என... ;)

    ReplyDelete
  3. சரி அந்தச்சாப்பாடு உறைப்பா இனிப்பா?
    கோழி என்று இருக்கிறதால உறைப்பு மாதிரியும், பொங்கல் என்று இருக்கிறதால இனிப்பு மாதிரியும் இருக்கு..

    சரியா சொல்லுங்கோவன்..

    ReplyDelete
  4. @EKSAAR
    // சரி அந்தச்சாப்பாடு உறைப்பா இனிப்பா?
    கோழி என்று இருக்கிறதால உறைப்பு மாதிரியும், பொங்கல் என்று இருக்கிறதால இனிப்பு மாதிரியும் இருக்கு..

    சரியா சொல்லுங்கோவன்..//


    தூள், கடுகு, மிளகு, பச்சை மிளகாய்... எல்லாம் போடுவதால் சரியான இனிப்புத்தான். :P

    ReplyDelete
  5. //விடுமுறைக்கு எக்சாருக்கு ஆதிரை அண்ணா வீட்ட தான் சாப்பாடு போல கிடக்கு? ;) //

    நன்றி idea தந்ததுக்கு

    //தூள், கடுகு, மிளகு, பச்சை மிளகாய்//

    கோழி போடுவீங்களா?

    ReplyDelete
  6. அண்ணே வாய் ஊறுதன்ன சின்ன வயசிலேயே நல்லாய் திண்டு தேர்த்திட்டன். இருந்தாலும் நம்ம வீட்டில் இருந்து சாப்பிடுவது ஒரு சுகம் தான். அதுசரி கோழிப்புக்கை உங்கள் சிங்கள நண்பர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்.

    ReplyDelete
  7. மணற்காடு கடற்கரையை ஞாபகப்படுத்த எனக்கும் ஒரு சோக சம்பவம் இருக்கிறது :(

    இன்னுமொரு விசயம், நான் வெஜிடேரியன். வீட்டுக்கு வந்தா சக்கரைப்புக்கையே போதும் :p

    ReplyDelete
  8. . இரண்டாவது தடவையாக இன்னொரு தரம் சமைப்பதற்கு தயாராக இருக்கிறாளாம். ஆகவே, அடுத்த தடவை வரும் போதும் மறக்காமல் வந்திடுங்கள்...!!!////

    திருப்பியுமா வலைய விரிக்கிறான்!!! சிக்குவனா இந்த சிங்கம்!!!

    ஊர் சுற்றிப்பார்க்கவென வந்தவர்கள் கோழிப்புக்கை சாப்பிட்ட மறுநாள் ஓய்வெடுத்து வீட்டில் தங்கியிருந்தார்களாம்.///

    எங்க ஓய்வெடுத்தம் நிக்காம ஓடியது சாரி ஓடித்திரிந்தம்!!!!

    இதிலே இன்னொன்றையும் மறைக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும். அன்றைக்குத்தான் நானும் முதன் முதலாய் மணற்காட்டுக்கடலில் கால் நனைத்தேன். ஆனாலும், நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த வழிகாட்டியாய் நடித்ததை எண்ணி இப்பவும் பிரமிக்கின்றேன்.///

    டாய் துரோகி! உன்னைய நம்பிதானே நாங்க கடல்ல அவளவுதூரம் போனம்!! இதுமுதலே தெரிஞ்சிருந்தா கடலிக்குள்ள காலே வச்சிருக்கமாட்டன்!!!

    ReplyDelete
  9. @ EKSAAR: அந்த சாப்பாடு உறைப்பா இனிப்ப எண்டு பத்தி எரிஞ்ச என்னோட வயித்தை கேட்ட வடிவா சொல்லும்!!! இப்பவும் இந்த பதிவை சத்தமா படிக்க வயித்துக்கு "கோழிப்புக்கை" எண்டு கேட்டுட்டுது போல அதுதான் நான் திருப்பியும் 3ஆம் முறை தாக்குதல் நடத்திபோட்டு களைச்சுபோய் இருக்கிறன்!!!

    ReplyDelete
  10. தமிழ் மதுரம்May 6, 2010 at 6:08 AM

    ஊர் நினைவுகளை அப்பிடியே கொண்டு வந்திருக்கிறியள். நான் ஒஸ்ரேலியா வந்தாப் பிறகும் கோழிப் புக்கை சாப்பிடனானெண்டால் சொல்ல்லவே வேணும். பச்சையரிசிச் சோற்றிலை காய்ச்சி, நல்லாக் கறிவேப்பிலையும் போட்டு, அளவாக வாசனைத் திரவியங்களும் போட்டு, கோழியையும் போட்டு காய்ச்சிச் சாப்பிட்டால் சொல்ல வேணுமே?


    ஆதிரை உங்கடை கையைக் கொண்டு வாங்கோ மணந்து பார்க்க? கோழி வாசம் அடிக்குதோ என்று பார்க்கத் தான்:))

    ReplyDelete

You might also like