Search This Blog

Saturday, May 8, 2010

இராவணா - வரலாற்றுத் திரிபு


மணிரத்னம்... சினிமா உலகில் வியந்து நோக்கப்படும் இயக்குனர்களில் ஒருத்தர். காதல், தீவிரவாதத்தின் தாண்டவம் போன்றவற்றை தனது திரைப்படங்களினூடு மக்களின் மனங்களில் பதித்தவர். எப்போதும் இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை.

இவரின் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகும் இராவணா படத்தின் பாடல்கள்தான் இப்போது எங்கும் ஆக்கிரமித்து நிற்கின்றன. இப்படத்தில் விக்ரத்துடன் ஜோடி சேர்கின்றார் ஜஸ்வர்யா ராய். வைரமுத்துவின் வைர வரிகள், இரகுமானின் தெவிட்டாத இசை... இரண்டும் இணைந்து காதில் தேன் வார்க்கின்றன. இரகுமானை இசையுலகத்துக்கு தனது ரோஜா படத்தின் மூலம் அறிமுகம் செய்தவரும் மணிரத்னமே.

வெளிவந்த பாடல்களில் “காட்டுச் சிறுக்கி... காட்டுச் சிறுக்கி...”, “உசிரே போகுதே... உசிரே போகுதே... உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” ஆகிய படல்கள் கேட்டதும் சிக்கெனப் பிடித்துக் கொண்டன. சங்கர் மகாதேவனுடன் இணைந்து அனுராதா பாடும் காட்டுச் சிறுக்கி என்று ஆரம்பிக்கும் பாடலில் வரும் வரிகளில், "பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தைக் குட்டி நகருதடி" தனிமையின் கனதியினை வடித்தெடுக்கின்றது வைரமுத்துவின் பேனா... கூடவே இசையும். “உசிரே போகுதே... உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” எனும் பாடல் தினமும் காலை வேளையில் என் தேசிய கீதமானது. படத்துக்காகக் காத்திருக்கின்றேன்!!!

தளபதி படத்தின் மூலம் மகாபாரதக்கதையையும், ரோஜா படத்தின் மூலம் நள-தமயந்தி கதையையும் நினைவூட்டிய மணிரத்னம் இப்படத்தின் மூலம் இராமாயணத்தைப்பற்றி பேச விரும்புகின்றார் என ஊகிப்பது இலகு.

ஆனால், இராமாயணத்தில் அரக்கனாகவும், அசுரனாகவும், பெண் பித்துப் பிடித்தவனாகவும் சித்திரிக்கப்பட்ட தமிழ் மன்னனான இராவணன் உண்மையில் ஒரு கொடுங்கோலனா என்ற வினாவை இங்கு எழுப்ப முனைகின்றேன்.

வரலாற்றின் திரிபுகளால் - ஆரிய ஆதிக்கத்தின் விளைவால் இராமன் எனும் கதாபாத்திரத்துக்கு எதிர் மறையாக உருவகிக்கப்பட்டவன் தான் இராவணன். கம்பர் சொல்கின்ற வலிதற்ற - நடைமுறையில் ஓட்டைகள் மிகுந்த - கவித்துவ மயக்கத்தில் அடங்கிப்போன காரணங்களை எடுத்து அலசி ஆராய முற்படுங்கள். இராவணன் கொடுங்கோலனாக அன்றி, சிவபக்தனாக தோன்றுவான். இராமனைக் கடவுளாக்க கம்பன் கையாண்ட உத்தி இராவணனை அசுரனாக்கியது.

சூரியன் வானொலியின் நேற்றைய காற்று நிகழ்ச்சியில் இவ்விடயம் தொடர்பாக அன்றொருநாள் வரலாறுகள் அலசி ஆராயப்பட்டது ஞாபகத்துக்கு வருகின்றது. அப்போது சூரியனில் பணியாற்றிய கிருஷ்ணாவும் பிரதீப்பும் இந்நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினார்கள். ஆனால், அந்நிகழ்ச்சி தொடர்பாக எழுத்து வடிவங்களில் எதுவுமே என் தேடலுக்குள் அகப்படவில்லை.

மணிரத்னத்தின் இராவணனுக்காக காத்திருக்கின்றேன்... வரலாற்றுத்தவறுகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையுடன்...!!!

12 comments:

  1. // மணிரத்னத்தின் இராவணனுக்காக காத்திருக்கின்றேன்... வரலாறுத்தவறுகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையுடன்...!!! //

    நானும் நானும்....

    எனக்கு வரலாறு பெரிதாகத் தெரியாதென்றாலும், வடமொழியில் வந்த இராமாயணத்தில் இராவணன் இவ்வளவு கொடியவனாக காட்டப்படவில்லை என்று கேள்விப்பட்டேன், அறிய முயற்சிக்கிறேன்... ;)

    ReplyDelete
  2. கதாநாயகனை உயர்த்திக்காட்டி, வில்லனை இன்றளவு கொடுங்கோலனாக்குவது பெரும்பாலான கதாசிரியர்கள் செய்வதுதான். அது இன்றுவரை தொடர்கிறது. ராஜ் தொலைக்காட்சியில் வரும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா தொடரில் மிகப்பெரும் வீரனாகச் சித்திரிக்கப்பட்ட இராவணனை பயந்து நடுங்குபவனாகக் காட்டுகிறார்கள். வரலாறுகள் வெற்றிபெற்றவனால் திரிபுபடுத்தப்படுகின்றன. நாளை வேறுசில வரலாறுகளுக்கும் இதுதான் கதியோ???

    ReplyDelete
  3. //மிகப்பெரும் வீரனாகச் சித்திரிக்கப்பட்ட இராவணனை//

    மன்னிக்கவும், அது கம்சனை என்று வந்திருக்கவேண்டும்

    ReplyDelete
  4. இராவணனனை நானும் எதிர்பார்த்திருக்கிறேன்... உசிரே போகுதே.. உசிரே போகுதே...

    ReplyDelete
  5. பாடல்கள் சூப்பர் ஆக இருக்கண்ணே. என்னது ராவணனுக்கு காத்திருக்கிறிங்களா? இது புதுசாய் இருக்கே. அண்ணே இருக்கிற ராவனன்களே போதும் அப்புறம் ராமர்கள் சீதைகள் என்று பொய்யர்கள் கூடிவிடுவார்கள். இல்லையா கான்கொன் ராமா?

    ReplyDelete
  6. வான்மீகி இராமாயணமா? கம்பராமாயணமா?

    ReplyDelete
  7. மணிரத்னம் இப்படித் தான் கன்னத்தில் முத்தமிட்டால் இலும் அரைகுறையாக வரலாற்றைச் சொல்ல முனைந்தவர்

    ReplyDelete
  8. // கதாநாயகனை உயர்த்திக்காட்டி, வில்லனை இன்றளவு கொடுங்கோலனாக்குவது பெரும்பாலான கதாசிரியர்கள் செய்வதுதான். அது இன்றுவரை தொடர்கிறது. ராஜ் தொலைக்காட்சியில் வரும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா தொடரில் மிகப்பெரும் வீரனாகச் சித்திரிக்கப்பட்ட இராவணனை பயந்து நடுங்குபவனாகக் காட்டுகிறார்கள். வரலாறுகள் வெற்றிபெற்றவனால் திரிபுபடுத்தப்படுகின்றன. நாளை வேறுசில வரலாறுகளுக்கும் இதுதான் கதியோ??? //

    என் கருத்தும் இதே தான். நாளை என்ன இன்றே வரலாறுகள் திரிபு படுத்தப்படுகின்றன.

    ReplyDelete
  9. நானும் எக்கச்சக்கமாய் காத்திருக்கிறேன் ஜூன் பதினேட்டுக்காக
    அருமையான பதிவு

    ReplyDelete
  10. துணிவான ஒரு பதிவு,
    ஒரு epic இற்கு இவ்வளவு மதிப்பு ஏன் என்ற் தெரியவில்லை. தமிழ் பாடத்திட்டத்தினூடாக இது இளசுகளின் மனதில் விதைக்கப்படுகிறது.

    ஒரு பாகிஸ்த்தானியனை நல்லவனாகவும், இந்தியனை அவனுக்கு எதிரானவனாகவும் சித்தரித்து ஒரு இலக்கியம் வந்தால் இந்தியா நிச்சயம் அதை பாடத்திட்டத்தில் வைத்திருக்காது. ஆனால் நாம் வெட்கமில்லாமல் வைத்திருக்கிறோம்.

    இது கூட ஒரு திணிப்புத்தானே?

    ஆயினும் இராவணன் என்னும் பெயரினூடாக மணிரத்னம் அரசியல் செய்யமாட்டார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  11. //மணிரத்னம்... சினிமா உலகில் வியந்து நோக்கப்படும் இயக்குனர்களில் ஒருத்தர்//

    அது ஏனுங்க?

    ReplyDelete
  12. குட் போஸ்ட் ஆதிரை! ராவணன் குறித்த த்ங்கள்து பார்வை பிடித்திருக்கிறது!

    ReplyDelete

You might also like