Search This Blog

Wednesday, May 12, 2010

சாத்திரங்கள் பொய்ப்பதில்லை


சாத்திரங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்று எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்யத் தயார். அதேபோல், எந்தவொரு காரியத்துக்கும் குறிப்புடன் சாத்திரம் பார்க்க முன் வருகின்ற பெற்றோரை மீறிவிடமாட்டேன் என்பதும் சத்தியம்...!!! இரண்டுமே முரண்பாடுகள் தான். கைரேகையிலும், கிளி வாய் ஓலையிலும் என் எதிர்காலம் எப்படி அடகு வைக்கப்பட்டிருக்கும்? எனக்குள் எழுகின்ற வினா இது.

இந்தச் சாத்திர சம்பிராதயம் என் பத்து வயதில் அறிமுகமானது; அல்லது, அந்த வயதில் தான் அறியத் தொடங்கினேன். எங்கள் குடும்பம் அப்போது செம்பியன்பற்றில் இருந்தது. மாதத்திற்கு ஒரு தடவை கதிர்காமக் கந்தன் புகழ் பாடியவாறு குடுமி வைத்த சாத்திரி ஒருத்தர் வருவார். எங்கள் பிஞ்சுக் கரம் நிறைய விபூதி, கதிர்காமத்தின் பெயரால் கோயில் நூல்... இவற்றுடன் கை ரேகை பார்க்காமலே தண்ணியிலே கண்டம், படிப்பிலே சுட்டி என்று எதாவது அப்பாவுக்கு கோள் மூட்டிப் போட்டு போய் விடுவார். அதற்குப் பிறகு கடற்கரைக்குப் போகவும் முடியாது; மாலை நேர விளையாட்டு நேரமும் சுருங்கிவிடும். சாத்திரியை மனதுக்குள்ளாவது சபித்துக் கொள்ளுவோம் என்றால் அதுவும் தெய்வக்குற்றம் ஆகிடுமாம்.

அப்போதெல்லாம் எப்போதாவது இருந்து விட்டு எங்கேயாவது தட்டுப்படுகின்ற சாத்திரிகள் யாழ்ப்பாணத்துக்கு படையெடுத்து வந்த காலமும் இருந்தது. விடுதலைப்புலிகளுக்கும் ரணில் தலைமையிலான அரசுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம் அது...!

கழுத்து நிறைய மாலை, கை நிறைந்த வளையல்கள், ஒரு ஓலைக் கட்டு, வெற்றிலைச்சாறு வழிகின்ற வாய், சிலருக்கு இடுப்பிலே ஒரு குழந்தை... இவைகள் தான் சாத்திரக்காரர்களின் அடையாளங்களாக இருந்தது. குஞ்சு குருமன்கள் கூட தொழில் தேர்ச்சியுடன் வந்தார்கள். “சாத்திரம் பார்க்கலையா...?” என்று ஆரம்பித்து, “உங்களுக்கு நல்ல காலம் காத்திருக்கிறது... ஒரு தரம் கேட்டுப்பாருங்கோ அம்மா/ஐயா... ” என்று நெஞ்சிலே பால் வார்ப்பார்கள். அல்லாது விடின், “தூரப்பயணம் காத்திருக்கு... உயிருக்கே ஆபத்து வரலாம்” என்று மரண பயம் காட்டி பீதியைக் கிளப்புவார்கள். இந்த வார்த்தை ஜாலத்துக்கு மயங்கி மயில்களை இழந்தவர்கள் பலருண்டு.

சிவனே என்று என்பாட்டுக்கு வீதியால் போன என்னை யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் வம்புக்கிழுத்து சாத்திரம் பார்த்த ஒருத்தன்... ஈற்றில் அதுவரை கேட்டிராத வார்த்தைகளில் என்னை அர்ச்சித்து சபித்துப் போன கதை மறக்க முடியாதது.

ஏ9 பாதையால் வந்த இவர்கள் தங்களை சாத்திரக்காரர் என்று சொன்னாலும் - ஊர் நம்பினாலும், பக்கத்து வீட்டு பார்வதி ஆச்சிக்கு உவர்கள் றோவின்ர ஆட்கள்... அல்லது சிஐடிமார்.

நீங்கள் சாத்திரக்காரர்களின் தொல்லையை அனுபவிக்க வேண்டுமா? வார இறுதி நாட்களில் வெள்ளவத்தை பீச்சுக்குப் போய்ப் பாருங்கள். அதே வார்த்தை ஜால மாய வித்தை. ஒரு நற்செய்தியுடன் ஆரம்பிப்பார்கள் - அல்லது, உயிருக்கு உலை வைக்கும் செய்தியை காவி வருவார்கள்..! ஆரம்பக்கட்டணம் எப்போதும் ஐம்பது ரூபாய்தான். (நேற்று முன்தினம் ஏறின காஸ் விலைக்கு முந்தைய நிலவரப்படி.) எவ்வளவு நேரம் அவர்கள் திருப்பாவுக்கு நீங்கள் தலையாட்டி மத்தளம் வாசிக்கின்றீர்களோ... அந்தளவுக்கு நேர் விகிதமாய் பொக்கட்டும் காலியாகும். ஜனாதிபதி கூட கை மாறுவார்... ஆயிரம் ரூபாய் தாளைச் சொன்னேன்!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை... நண்பர்கள் இருவருடன் வெள்ளவத்தையில் கடற்காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். சாத்திரக்காரர்கள் அங்கே வழமையாக காதல் ஜோடிகளையே குறி வைப்பார்கள். ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் நோக்கில்... ஆனால், அன்று மாட்டுப்பட்டது நாங்கள் மூவரும்... வழமை போல கேட்காமலே முன் புராணம் பாடத் தொடங்கினாள் சாத்திரக்காரி ஒருத்தி. இப்படித்தான் தொடங்கினாள்... “இன்னும் இரண்டு வருடத்தில்.... அப்போது எனக்கு இருபத்திரெண்டு வயது ஆகும் போது...” நல்லதோ கெட்டதோ அவள் சொல்லி முடிக்கவில்லை. ஆனால், அன்பு நண்பர்கள் இருவரும் முடித்து வைத்தார்கள். அப்படி ஒரு ஏச்சு இது நாள் வரை அவள் வாங்கியிருப்பாளோ தெரியாது. எப்போதும் போல சாபங்களைத் தெளித்தவாறு போய் விட்டாள். என்னால் மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை.

★ ★ ★


வீட்டுக்கு வந்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தேன். மின்னஞ்சலொன்று காவி வந்த செய்தி இப்படி இருந்தது: “யாத்ரா நிகழ்வை முன்னிட்டு இளமைத்துடிப்புள்ள உங்கள் நட்சத்திர வாரம் யாழ்தேவியில் நீடிக்கப்பட்டுள்ளது.

சாத்திரங்கள் எப்போதும் பொய்ப்பதில்லை...

(சம்பவங்கள் கற்பனையானவை - நம்புங்கள்)

7 comments:

  1. தமிழ் மதுரம்May 12, 2010 at 10:35 AM

    நான் தான் முதலாவது வரவு

    ReplyDelete
  2. தமிழ் மதுரம்May 12, 2010 at 10:40 AM

    நானும் உந்த்ச் சாத்திரக்காரர்களாலை நிறையப் பாதிக்கப்பட்டிருக்கிறன். மெல்பேண் ஜோதிடத்துக்காக 700 டொலர்ஸ் இழந்த பிறகு தான் தெளிந்து கொண்டேன். எல்லாமே பொய் என்று.

    ReplyDelete
  3. அய்... இன்னும் ஒர் கிழமை..

    ReplyDelete
  4. இன்னுமொரு கிழமை... கலக்குங்க....

    ReplyDelete
  5. படித்த இளமைத்துடிப்புள்ள பதிவருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சில வேளைகளில் சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் தவிர்க்கமுடியாதவையே.

    ReplyDelete
  7. ஹி ஹி.... :)))

    நல்ல நகைச்சுவை...
    பகிர்வுக்கு நன்றி... :P

    ReplyDelete

You might also like