Search This Blog

Saturday, May 8, 2010

கிளப்பப்படும் பீதிகளும் வதந்திகளும்

காலை பத்து மணி... சோம்பல் முறித்து நித்திரைப் பாயினால் எழும்பும் போதுதான் அந்த விடயம் உறைத்தது. நேற்றிரவு என் நண்பனுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஒன்றை மறந்திருந்தேன்... அவசரமாக அவனுக்கு அழைப்பெடுத்தேன்.

துரதிர்ஸ்டம்... அவனுடைய கைத்தொலைபேசி அவனுடைய தம்பியின் உபயோகத்தில் இருந்தது. அவனிடம் வீட்டுத் தொலைபேசி எண் பெற்று முயற்சித்தேன். ம்கூம்.... அழைப்பு இணைப்புப் பெறவில்லை. தொலைபேசி அணைக்கப்பட்டிருப்பதாக மறுமுனையில் கீச்சிட்ட பெண் சொல்லிப் போனாள்.

வேறு வழியில்லை... அவன் தம்பி வீட்டுக்குப் போகும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான். ஆனால், நீண்ட நேரம் எடுக்கவில்லை. பதினொரு மணியளவில் நண்பனே அழைப்பெடுத்தான்.... வீட்டுத் தொலைபேசியிலிருந்து!!!

பேசி முடிக்கும் தறுவாயில் தான் சொன்னான். சில தொலைபேசி எண்களிடமிருந்து வருகின்ற அழைப்புக்களுக்கு பதிலளிக்க முற்பட்ட 27 பேர் மரணித்திட்டார்கள். அந்த அழைப்புக்கள் சிவப்பு நிறத்திலே வருகின்றன. வீட்டுத் தொலைபேசியில் அழைப்பு எண் காட்சிப்படுத்தப்படாமையினால் அதை அணைத்து வைத்திருந்தார்களாம்.

என்ன கொடுமை இது...! அப்போதுதான் அர்த்த சாமம் 6.30 இற்கு (விடுமுறை நாட்களில் காலை 6.30 எனக்கு அர்த்த சாமம் தான்) யாழ்ப்பாணத்திலிருந்து நண்பனொருத்தன் அழைப்பெடுத்து இது தொடர்பாக அறிவுறுத்தியது ஞாபகம் வந்தது. பாவம் அவன்...! நித்திரைத் தூக்கத்தில் என்ன உளறித்தொலைத்தேனோ தெரியாது... கேட்க வேண்டும்...!!! ஆனாலும், அக்கறைக்கு நன்றி நண்பா.

இந்த விடயம் தொடர்பாக இன்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்; அக்கறையாக வந்த குறுஞ்செய்திகளை நெருங்கியவர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால், தமிழ்நாட்டு மர்ம வெளிச்சம் போன்ற கதைதான் இதுவும்.

ஒரு தொலைபேசியிலிருந்து எடுக்கப்படும் அழைப்பின் மூலமோ அல்லது பெற்றுக்கொள்ளப்படும் அழைப்பின் மூலமோ பேசும் தொலைபேசியின் அதிர்வெண்களில் மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. அதுமட்டுமன்றி, தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்துவதன் மூலம் அதனூடு வைரஸினை உட்புகுத்தி மறுமுனையில் இருப்பவரை சாகடிக்கவும் முடியாது.

இந்த வதந்தியின் பிறப்பிடம் பாகிஸ்தான். 2007 ஆம் ஆண்டு இப்படியான வதந்தி ஒன்று அங்கே காட்டுத்தீ போல பரவியது. பின்னர், உடனடியாக ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகள் இப்படியான ஒரு தாக்குதலை தொலைபேசிகளினூடு நடாத்த முயற்சிப்பதாக வதந்தி பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்நாட்டு அரசுகள் தங்கள் தொலைபேசி இணைப்பு வழங்குனர்களுடன் இணைந்து இந்தச்செய்திகளை மறுத்திருந்தனர்.

உயர்தர தொழில்நுட்ப உதவியுடன் தீவிரவாதிகள் அமெரிக்க மக்களை பழிவாங்கும் நோக்குடன் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவர்களை கொல்வதாக புனைகதை எழுத்தாளர் எழுதிய கதையொன்றின் அடிப்படையிலேயே இப்படியான வதந்திகளும் பீதிகளும் கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆச்சரியம் என்னவெனில், தொலைபேசியினூடான வைரஸ் தாக்குதலின் மூலம் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதும் 27 பேர்... ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதும் 27 பேர்... இன்று இலங்கையில் கொல்லப்பட்டதும் 27 பேர்... அதில் ஒருத்தர் யாழ்ப்பாணம், இன்னொருத்தர் வெள்ளவத்தையாம்...!!!

7 comments:

  1. அதிகரித்துவிட்ட அலைபேசிப் பாவனையும், பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களின் பாவனை அதிகரிப்பும் வதந்திகள் பரவுவதை இலகுவாக்கியிருக்கின்றன.

    ஆனால் இதை ஒரு விடயமாக எடுத்து பலர் செயற்பட்டது தான் வருத்தத்திற்குரியது.
    பேஸ்புக்கில் போட்டவர்களை அந்த செய்தியை அழிக்க வற்புறுத்தினேன், ஆனால் சிலர் அழிக்கவில்லை...

    எங்களுக்கென்று பொறுப்பு வரும்வரை எதுவும் செய்ய முடியாது... :(

    ReplyDelete
  2. அண்ணே வெள்ளவத்தையில் பாதிக்கப்பட்டது நீங்களா? உங்களுக்கு யாழில் நின்றால் தான் காலை ஆறு முப்பது நாடு சாமம் நமக்கு எப்போதுமே அதுதான்.

    ReplyDelete
  3. தொலைபேசியூடு வைரசாம், ஆளைக்கொல்லுமாம், அந்திராக்ஸ் மாதிரியாம், கொஞ்சம் கூட common sense இல்லை போல...

    ReplyDelete
  4. இந்த smsஐ பலநாட்களுக்கு முன் கண்டிருந்தேன். ஆனால் நேற்று யாழ்ப்பாணத்தில்தான் இதற்கு உரு ஏற்றப்பட்டுள்ளது. ஒரு மரணசடங்கில் கலந்துகொண்ட என் நண்பனிடம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வேலைசெய்யும் ஒருவர் கொழும்பு வைத்தியசாலையில் இருந்து இச்செய்தியை சொன்னதாக கூறினாராம். இவர்களுக்கு இதில் என்ன சுகம்? இவர்களை மாட்டிவிட்டால் என்ன?

    Kangon சொல்லியிருப்பது மெத்தச்சரி

    ReplyDelete
  5. //இன்று இலங்கையில் கொல்லப்பட்டதும் 27 பேர்... அதில் ஒருத்தர் யாழ்ப்பாணம், இன்னொருத்தர் வெள்ளவத்தையாம்...!!!//

    அப்ப நான் கேள்விப்பட்ட கொச்சிக்கடை இரண்டுபேர் இந்தக்கணக்கில் இல்லையா?

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்
    (வதந்திகளை எப்போதுமே நம்பகூடாது.)

    ReplyDelete
  7. வதந்தி பரப்புவதில் நம்மவருக்கு ஒரு தனி இன்பம்.

    எனக்கு மட்டும் ஒரு 100 sms ஆவது இது பற்றி வந்திருக்கும்..
    நேற்று உத்தியோகபூர்வனாக வானொலியில் இது பற்றி நாம் அறிவித்த பிறகும் உண்மையா,பொய்யா என்று கேட்ட கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்ல?

    ReplyDelete

You might also like